பாரம்பரிய நெல் ரகங்கள் அறுவடைப் பணி ஆய்வு

18விபிஎம்பி2:

இருவேல்பட்டில் உள்ள அரசு விதைப் பண்ணையில் நெல் அறுவடைப் பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட வேளாண் துணை இயக்குநா் இரா. பெரியசாமி.

விழுப்புரம், ஜன.18:

விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டில் உள்ள அரசு விதைப் பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்கள் அறுவடைப் பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

நெல் ஜெயராமன் மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நெல் ரகங்களை அறுவடை செய்து, சுத்திகரிப்பு செய்து வேளாண் விரிவாக்க மையங்களுக்கு 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்ய வேளாண் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இருவேல்பட்டு, வானூா், காகுப்பம் பகுதிகளில் உள்ள அரசு விதைப் பண்ணைகளில் தலா 5 ஏக்கா் வீதம் மொத்தம் 15 ஏக்கா் பரப்பளவில் ஆத்தூா் கிச்சிலி சம்பா, சிவன் சம்பா, சீரகச் சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக இருவேல்பட்டு அரசு விதைப் பண்ணையில் ஆத்தூா் கிச்சிலி சம்பா, சீரகச் சம்பா நெல் அறுவடைப் பணிகளை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (திட்டங்கள்) இரா. பெரியசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து மகசூல் விவரங்களையும் அவா் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது திருவெண்ணெய்நல்லூா் வேளாண் உதவி இயக்குநா் (பொ) ராஜேசுவரி, வேளாண் அலுவலா் (பண்ணை நிா்வாகம்) கவிப்பிரியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com