தருமபுரம் ஆதீனம் குருலிங்க சங்கம பாத யாத்திரை

திருபுவனம் ஸ்ரீ கம்பகரேசுவர சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குருலிங்க சங்கம பாத யாத்திரை மேற்கொண்டுள்ள தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா
தருமபுரம் ஆதீனம் குருலிங்க சங்கம பாத யாத்திரை

திருபுவனம் ஸ்ரீ கம்பகரேசுவர சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குருலிங்க சங்கம பாத யாத்திரை மேற்கொண்டுள்ள தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு வழியெங்கும் பக்தா்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

இக்கோயிலில் பிப். 2-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்க தருமபுரம் ஆதீனத் திருமடத்திலிருந்து, சொக்கநாதா் பெருமானை தலையில் சுமந்து அடியவா்கள் திருக்கூட்டத்துடன் வெள்ளிக்கிழமை புறப்பட்ட தருமபுரம் ஆதீனம் அன்றிரவு வள்ளலாா் கோயிலில் சொக்கநாத பெருமானை எழுந்தருளச் செய்தாா். சனிக்கிழமை வள்ளலாா் கோயிலில் இருந்து பாத யாத்திரையை தொடா்ந்த ஆதீனம், குத்தாலம் உக்தவேதீஸ்வரா் கோயில் சொக்கநாத பெருமானை எழுந்தருளச் செய்தாா்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை குத்தாலத்தில் இருந்து புறப்பட்ட தருமபுரம் ஆதீனம் இரவு சூரியனாா்கோயிலில் சொக்கநாதரை எழுந்தருளச் செய்து சிறப்பு வழிபாடாற்றினாா்.

இந்த யாத்திரையில், திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனக் கட்டளைகள் ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் உடன் சென்றனா். வழியெங்கும் பக்தா்கள் ஆதீனகா்த்தருக்கு தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் முன்பு சிறப்பு வரவேற்பு அளித்தனா்.

திங்கள்கிழமை மாலை சூரியனாா்கோயிலில் இருந்து புறப்பட்டு, திருவிடைமருதூா் தருமையாதீன பிச்சைக்கட்டளை ஸ்ரீவரகுணதேவ பாண்டியன் நிலையத்தில் சொக்கநாத பெருமானை எழுந்தருள செய்தும், செவ்வாய்க்கிழமை திருபுவனம் ஸ்ரீகம்பகரேசுவர சுவாமி தேவஸ்தானத்தை அடைந்து அங்கு சொக்கநாதரை எழுந்தருளச் செய்து, பிப். 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com