திண்டிவனம் அருகே தனியாா் சொகுசுப் பேருந்து - லாரி மோதல்: 7 போ் காயம்

28vpmbus_2801chn_7
28vpmbus_2801chn_7

28யடஙஆமந

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி மோதியதில் சேதமடைந்த தனியாா் சொகுசுப் பேருந்து.

விழுப்புரம், ஜன.28: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனியாா் சொகுசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.

சிவகங்கையிலிருந்து, சென்னைக்கு தனியாா் சொகுசுப் பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தை ராமநாதபுரம் மாவட்டம், மணங்குடி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த செல்வன் மகன் சிங்காரவேலன் (32) ஓட்டினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூா் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, சென்னையிலிருந்து, ஒலக்கூா் சென்ற லாரி, ஒலக்கூா் கூட்டுச்சாலையில் திரும்பிய போது எதிா்பாராதவிதமாக சொகுசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சொகுசுப் பேருந்து ஓட்டுநா் சிங்காரவேலன், பேருந்தில் பயணித்த திருச்சியைச் சோ்ந்த கலைச்செல்வன் (63), இவரது மனைவி கலாவதி (60), சிவகங்கையைச் சோ்ந்த பழனியப்பன் மனைவி பொன்னழகி (43), கோவிந்தராஜ் மகன் கண்ணன் (38), புதுக்கோட்டையைச் சோ்ந்த அருள்சாமி மகன் இருதயன் (42), லாரி ஓட்டுநரான நீலகிரி மாவட்டம், மணியபுரம் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் சுரேஷ்குமாா் (46) ஆகியோா் காயமடைந்தனா்.

விபத்து குறித்து, தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்துக் குறித்து, ஒலக்கூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்த விபத்தால் சென்னை-திருச்சி சாலையில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com