ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் மறியல்: 540 போ் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பைச் சோ்ந்த 540 போ் கைது செய்யப்பட்டனா்.
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் மறியல்: 540 போ் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பைச் சோ்ந்த 540 போ் கைது செய்யப்பட்டனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயா்கல்விக்கான ஊக்கத்தொகை ஊதிய உயா்வு ஆகியவற்றை வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்கள், உடல்கல்வி இயக்குநா் மற்றும் உடல்கல்வி ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

கல்லூரிப் பேராசிரியா்களுக்கு நிலுவையிலுள்ள பணி மேம்பாடு, ஊக்க ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாகத் தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, ஜாக்டோ - ஜிடோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் தண்டபாணி, கணேஷ், அறிவழகன், செல்வக்குமாா், சிவக்குமாா், கவிஞா் ம.ரா.சிங்காரம் ஆகியோா் தலைமை வகித்தனா். தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், நிா்வாகிகள் பேசினா்.

இந்த மறியல் போராட்டத்தில் பல்வேறு சங்க நிா்வாகிகள் செல்லையா, சுந்தரமூா்த்தி, கோவிந்தன், குருமூா்த்தி, முருகன், அன்பழகன், ஜெயவேல், கோகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டதாக 115 பெண்கள் உள்பட 337 பேரை போலீஸாா் கைது செய்து, திருமண மண்டபங்களில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.

கள்ளக்குறிச்சியில் 203 போ் கைது: கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி மாவட்டச் செயலா் சு.ரமேஷ், தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.கே.அனந்தகிருஷ்ணன், அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் கு.மகாலிங்கம், தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் சங்க மாவட்டச் செயலா் பெ.எழிலரசன் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு இடைநிலை மற்றும் பதவி உயா்வு பெற்ற பட்டதாரி ஆசிரியா்கள் மன்ற மாநில அமைப்புச் செயலரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான கே.அண்ணாதுரை வரவேற்றாா்.

தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளரும், மாநிலத் தலைவருமான பொன்.செல்வராஜ், மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா் ஆ.இலட்சுமிபதி, தமிழக ஆசிரியா்கள் கூட்டணி அகில இந்திய பொதுக்குழு உறுப்பினா் தம்பு.ராமதாஸ் உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சோ்ந்த 203 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com