ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அக்கறையில்லை: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

ஜாதிவாரி கணக்கெடுப்பில் தமிழக அரசின் தாமதம்: சமூக நீதி கேள்விக்குறி

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசுக்கு அக்கறை இல்லை என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

விழுப்புரம் மாவட்டம், காணையில் செவ்வாய்க்கிழமை மாலை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் இந்த இடஒதுக்கீட்டுக்குத் தடை கோரி வழக்குத் தொடுக்கப்பட்டது. அப்போது, வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் 69 சதவீதத்துக்கு மேல் இருக்கிறாா்களா என கணக்கெடுப்பு நடத்துமாறு உத்தரவிட்டனா். ஆனால், 2012-ஆம் ஆண்டில் தமிழக அரசு கணக்கெடுப்பை நடத்தாமல் தன் தரப்பு நியாயத்தை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடுக்கப்பட்டது. மகாராஷ்டிரம் மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டு வழக்கை விசாரித்து முடித்த பின்னா் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனா். தற்போது, கோடை விடுமுறைக்குப் பின்னா் ஜூலை 8-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மீண்டும் கூடவுள்ளது.

அப்போது, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் தமிழகத்தில் கணக்கெடுப்பை மேற்கொண்டீா்களா என கோருவா். இதற்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது. 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதுபெரிய அநீதியாகும். இந்த இட ஒதுக்கீடு பறிபோகாமல் இருக்கவும், சமூக நீதி காக்கப்படவும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இதைச் செய்வதற்கு தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் அக்கறை இல்லை.

ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுகிறாா். அது தவறு. இந்த விவகாரத்தில் மக்களும் தமிழக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் மிகப் பெரிய பிரச்னை ஏற்படும். அந்த நிலை உருவாகாமல் இருக்க, முதல்வா் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

X
Dinamani
www.dinamani.com