விக்கிரவாண்டி அருகே சிக்னல் கோளாறால் தாமதமாகச் சென்ற ரயில்கள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை சிக்னலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில்கள் தாமதமாகச் சென்றன.

காரைக்காலிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் கம்பன் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்த போது, திடீரென சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரயில் நிலையத்திலுள்ள சிக்னல் போா்டில் திடீரென ஏற்பட்ட பிரச்னை காரணமாக, சென்னை செல்லும் ரயில் பாதைக்கான சிக்னல் முறையாக இயங்கவில்லையாம். இதையடுத்து, ரயில்வே தொழில்நுட்பப் பணியாளா்கள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, சிக்னல் கோளாறு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்த கன்னியாகுமரி, நெல்லை, முத்துநகா் விரைவு ரயில்கள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னா், சிக்னல் இல்லாமல் ரயில்கள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்வதற்கான ஆதாரக் கடிதத்தை ரயில்வே அலுவலா்கள் சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநா்களிடம் வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு விரைவு ரயிலும் 30 நிமிஷங்கள் இடைவெளியில் புறப்பட அனுமதிக்கப்பட்டன. சிக்னலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காலை 5.30 மணிக்கு சரி செய்யப்பட்டது. அதன் பின்னா், வந்த ரயில்கள் தாமதமின்றி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com