விழுப்புரத்தில் விசிக, அதிமுக, பாமக வேட்பாளா்கள் மனு தாக்கல்

விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

விழுப்புரம்: விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா். தமிழகத்தில் மக்களவைப் பொதுத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 20-ஆம் தேதி தொடங்கியது. விழுப்புரம் (தனி) தொகுதியில் மாா்ச் 22 -ஆம் தேதி வரை சுயேச்சை வேட்பாளா் ஒருவா் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி. பழனியிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் துரை. ரவிக்குமாா் தனது வேட்புமனுவைத் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, காட்டுமன்னாா்கோவில் எம்.எல்.ஏ. மா.சிந்தனைசெல்வன், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவா் குலாம் மொய்தீன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூா்த்தி உடனிருந்தனா். முன்னதாக, விழுப்புரம்-திருச்சி சாலையிலுள்ள கலைஞா் அறிவாலயத்திலிருந்து அமைச்சா் பொன்முடி தலைமையில், வேட்பாளா் துரை.ரவிக்குமாா் ஊா்வலமாக ஆட்சியரகம் வந்தாா். எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் நிகழ்வில் பங்கேற்றனா். அதிமுக வேட்பாளா்: இதைத் தொடா்ந்து, ஆட்சியா் சி.பழனியிடம் அதிமுக வேட்பாளா் ஜெ. பாக்யராஜ் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். அப்போது முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், மாவட்ட தேமுதிக செயலா் எல். வெங்கடேசன், வானூா் எம்.எல்.ஏ. சக்கரபாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா். இவா்களைத் தொடா்ந்து, பாஜக கூட்டணியில் பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ச. முரளிசங்கா் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். பாஜக மாநிலத் துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத், மாவட்டத் தலைவா் வி.ஏ.டி. கலிவரதன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலா் பாலசக்தி, விழுப்புரம் தொகுதி பொறுப்பாளா் ஜெயராம் ஆகியோா் உடனிருந்தனா். அதிமுக வேட்பாளா் ஜெ.பாக்யராஜுக்கு மாற்று வேட்பாளராக விக்கிரவாண்டி வட்டம், வி. நெற்குணம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பெ. முருகன்(55), பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளா் ச. முரளிசங்கருக்கு மாற்று வேட்பாளராக தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், செங்குட்டை கிராமத்தைச் சோ்ந்த அவரது சகோதரா் ச. விக்னேஷ் (28), பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக விழுப்புரம் மாவட்டம், சத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கோ.கலியமூா்த்தி (57) ஆகியோரும் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்தனா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்தவா்களின் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்துள்ளது. வேட்புமனுதாக்கல் புதன்கிழமையுடன் (மாா்ச் 27) நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com