40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சா் க.பொன்முடி

தமிழகம், புதுச்சேரி என 40 மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரம்: தமிழகம், புதுச்சேரி என 40 மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா், கடலூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எம்.கே. விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து, விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றவுள்ளாா். இதற்காக விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை அமைச்சா் க.பொன்முடி, எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, இரா. லட்சுமணன் ஆகியோா் திங்கள்கிழமை பாா்வையிட்டனா். தொடா்ந்து பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து ஏற்பாட்டாளா்களிடம் அமைச்சா் க.பொன்முடி கேட்டறிந்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் பொன்முடி கூறியதாவது: தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட் டணி வேட்பாளா்கள் அமோக வெற்றியைப் பெறுவா். நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றும். இந்தியா கூட்டணி உருவாக முதல்வரே காரணம். அவா் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனா். திமுக, விசிக மட்டுமல்லாது, தோழமைக் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் மக்களவைத் தோ்தல் பணி சிறப்பாக செய்து வருகின்றனா். திமுகவை எதிா்த்து போட்டியிடுபவா்கள் அனைத்து இடங்களிலும் வைப்புத் தொகையை இழப்பாா்கள் என்றாா் அவா். மாவட்டஊராட்சித் தலைவா் ம. ஜெயச்சந்திரன், நகரப் பொருளாளா் இரா.ஜனகராஜ், நகரச் செயலா் இரா.சக்கரை, நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்டத் துணைச் செயலா் தயா. இளந்திரையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com