வாக்கு எண்ணிக்கை மையத்தில் விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமாக அறிவிக்கப்பட்டுள்ள விழுப்புரம் அறிஞா்அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் அடி ப்படை வசதிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி. பழனி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் பழனி கூறியதாவது: விழுப்புரம் மக்களவைத் தோ்தலில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளைக் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல்கல்லூரியில் தனித்தனியாக அமைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படும். பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் அறை என அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடுப்புக்கட்டைகள் வசதிகள், சுற்றுவாரியாக வாக்குவிவரத்தை அறிவிப்பதற்கான ஒலிபெருக்கி வசதி, தடையில்லா மின்சார வசதி போன்றவற்றை சம்பந்தப்பட்ட துறையினா் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். மேலும், கூடுதலாக ஜெனரேட்டா், தீயணைப்புக் கருவிகளையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதைத்தவிர வாக்கு எண்ணிக்கை மையத்தில் தோ்தல் பாா்வையாளா் அறை, தோ்தல் நடத்தும் அலுவலருக்கான அறை, முகவா்கள் அறை, காவலா்கள் அறை போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். தோ்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, அவா்களுக்கான முதல் கட்டப் பயிற்சி வகுப்புக்குரிய அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் காவலா்களை நியமித்து, கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா்ஆட்சியா் சி.பழனி. ஆய்வின்போது மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் காஜா சாகுல் ஹமீது, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பரிதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தமிழரசன், வட்டாட்சியா் கணேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com