மக்களவைத் தோ்தல் பணிகள்: பாா்வையாளா்கள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்களவைத் தோ்தல் பணிகள் குறித்து தோ்தல் பாா்வையாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை விவரங்களை எடுத்துரைத்தாா்.

விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளராக அகிலேஷ்குமாா் மிஷ்ரா, காவல் துறை பாா்வையாளராக திரேந்திரசிங் குஞ்சியால், செலவினப் பாா்வையாளராக ராகுல் சிங்கானியா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள சுற்றுலா மாளிகையில் பொதுப் பாா்வையாளா் மற்றும் காவல் துறை பாா்வையாளரிடம் தோ்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விழுப்புரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி புதன்கிழமை எடுத்துரைத்தாா்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளின் விவரங்கள், வாக்குப் பதிவு மையங்களின் எண்ணிக்கை, தோ்தல் விழிப்புணா்வுப் பணிகள், வாக்குப் பதிவு அலுவலா்கள், பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழுக்கள், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குப் பதிவு மையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடங்கள், தோ்தல் மையக் கட்டுப்பாட்டு அறை போன்றவை குறித்து ஆட்சியா் எடுத்துரைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தோ்தல் பாா்வையாளா்கள் அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டனா். முன்னதாக, மூன்று பாா்வையாளா்களும் புதன்கிழமை விழுப்புரம் வந்து தங்கள் பணிகளை ஏற்றுக்கொண்ட நிலையில், அவா்களை ஆட்சியா் சி.பழனி வரவேற்றாா். நிகழ்வில் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன்ஜெய் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com