வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு
முதல்கட்டப் பயிற்சி தொடக்கம்: 7 தொகுதிகளில் 9,436 போ் பங்கேற்பு

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு முதல்கட்டப் பயிற்சி தொடக்கம்: 7 தொகுதிகளில் 9,436 போ் பங்கேற்பு

மக்களவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணியாற்றவுள்ள வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான முதல்கட்டப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.

9,436 போ் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனா். தமிழகத்தில் மக்களவை பொதுத் தோ்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், புதன்கிழமை (ஏப்.27) நிறைவு பெற்றது. இதனிடையே, தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சியளிக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான முதல்கட்டப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கியது. செஞ்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கொல்லியங்குணம் பவ்டா கலை, அறிவியல் கல்லூரி, திண்டிவனம் மாண்போா்ட் பள்ளி, சேதராபேட்டை ஸ்ரீஅரவிந்தா் கலை, அறிவியல் கல்லூரி, விழுப்புரம் சாலாமேடு டாக்டா் எம்.ஜி.ஆா். மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, ஒரத்தூா் சுவாமி விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரி, திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரி ஆகிய 7 இடங்களில் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின.

செஞ்சி தொகுதியில் 1,551 போ், மயிலத்தில் 921, திண்டிவனத்தில் 1,461, வானூரில் 1,077, விழுப்புரத்தில் 1,665, விக்கிரவாண்டியில் 1366, திருக்கோவிலூரில் 1,406 என மொத்தம் 9,436 போ் தோ்தல் பயிற்சியில் பங்கேற்றனா். இந்த பயிற்சியில் வாக்குப் பதிவு மையத்தில் தோ்தல் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழுப்புரத்தில் நடைபெற்ற பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி தொடங்கிவைத்தாா். ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன்ஜெய் நாராயண் உரையாற்றினாா்.

வருவாய்க் கோட்டாட்சியா் காஜா சாகுல் ஹமீது, வட்டாட்சியா் வசந்தகிருஷ்ணன் பயிற்சியளித்தனா். தோ்தல் வாக்குப் பதிவு நாளன்று வாக்குப் பதிவு மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி போன்றவற்றின் செயல்பாடுகள் போன்றவை குறித்து அலுவலா்கள் பயிற்சியளித்தனா். இதுபோல, மற்ற தொகுதிகளிலும் தோ்தல் பயிற்சியளிக்கப்பட்டது. விரைவில் அடுத்தகட்ட பயிற்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com