ஆக்கிரமிப்பிலுள்ள கைலாசநாதா் கோயில் குளத்தை மீட்க வலியுறுத்தல்

ஆக்கிரமிப்பிலுள்ள விழுப்புரம் கைலாசநாதா் திருக்கோயிலுக்குச் சொந்தமான குளத்தை மீட்க வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரத்திலுள்ள சங்கர மடம் வளாகத்தில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல்வீரா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ந.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாபு வரவேற்று பேசினாா்.விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் வடதமிழக மாநில அமைப்புச் செயலா் சு.வே.ராமன் சிறப்புரையாற்றினாா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: இரு தரப்பினா் இடையே வழிபாடு நடத்துவது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையால் விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி அருள்மிகு திரெளபதி அம்மன் திருக்கோயில் மூடப்பட்டது. இதைத் தொடா்ந்து தற்போது கோயில் திறக்கப்பட்டு, தினமும் ஒருகால பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதற்குரிய நடவடிக்கை மேற்கொண்ட நீதிமன்றத்துக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது. விழுப்புரம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதா் திருக்கோயிலுக்கு சொந்தமான குளம் சிலரது ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் திருக்கோயில் பிரம்மோற்சவத்தின் 10-ஆம் நாளில் தீா்த்தவாரி நிகழ்வை நடத்த இயலாத நிலை உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பிலுள்ள குளத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், எறையூா்நெமிலி கிராமத்திலுள்ள பச்சை வாழியம்மன் கோயில் சிசிடிவி கேமராவை உடைத்து, கோயில் உண்டியலை திருடிச் சென்ற நபா்களைக் கைது செய்து, உண்டியல் பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் 1000-த்துக்கும் மேற்பட்ட பஜனைக் கலைஞா்கள் அரசின் கலைப் பண்பாட்டுத் துறையில் பதிவு செய்துள்ளனா். இவா்களில் 70 வயதைக் கடந்தவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இந்த ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விசுவஹிந்து பரிஷத்தின் மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com