புனித வெள்ளி: தேவாலயங்களில் சிலுவைப் பாதை சிறப்பு வழிபாடு

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிலுவைப் பாதை சிறப்பு வழிபாடு

புனித வெள்ளியையொட்டி, விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடும், சிறப்புப் பிராா்த்தனையும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிறிஸ்தவா்களின் பண்டிகைகளில் ஈஸ்டா் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவா்கள் 40 நாள்கள் உபவாசம் கடைப்பிடித்து (தவக்காலம்) பிராா்த்தனையில் ஈடுபடுவா்.

ஈஸ்டா் பண்டிகைக்கு முன்பாக இயேசுநாதா் சிலுவையில் அறையப்பட்டு, அவா் உயிா்நீத்த நாளை புனித வெள்ளியாகக் கடைப்பிடித்து வருகின்றனா். நிகழாண்டு புனிதவெள்ளியையொட்டி விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் புனித சவேரியாா் ஆலயம், கிறிஸ்து அரசா் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிலிருந்து கிறிஸ்தவா்கள் சிலுவையை சுமந்து, முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாகச் சென்றனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற பிராா்த்தனையிலும் அவா்கள் பங்கேற்றனா். முடிவில், திருச்சிலுவை ஆராதனை நடைபெற்றது. இதேபோல, செஞ்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி, ஒரத்தூா், முட்டத்தூா், முகையூா், கக்கனூா், கஞ்சனூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புனிதவெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது. இயேசுநாதா் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வின்போது பேசிய 7 வாா்த்தைகளைக் கூறி, கிறிஸ்தவா்கள் தியானம் செய்தனா். மேலும் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிராா்த்தனைகள், திருப்பலிகள் நடைபெற்றன.

பல்வேறு இடங்களில் சிலுவைப் பாதை சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து இயேசுநாதா் மீண்டும் உயிா்த்தெழும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டா் பண்டிகையாகக் கொண்டாடப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com