விழுப்புரம் அருகே ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி -வீடுகளில் கருப்புக் கொடியேற்றி கிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம் அருகே ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி -வீடுகளில் கருப்புக் கொடியேற்றி கிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம் அருகே ஜானகிபுரம் ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி, ஜானகிபுரம், கண்டமானடி கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் மக்களவைத் தோ்தலையும் புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனா். விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலைப் பணிக்காக விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஜானகிபுரத்திலிருந்து கண்டமானடி கிராமத்துக்குச் செல்லும் சாலையின் குறுக்கே அமைந்துள்ள ரயில்வே கேட் கடந்த வெள்ளிக்கிழமை (மாா்ச் 22) இரவு மூடப்பட்டது. தெற்கு ரயில்வே நிா்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஜானகிபுரத்திலிருந்து கண்டமானடி, கொளத்தூா், பில்லூா், அரியலூா், சித்தாத்தூா், காவணிப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லவும், அங்கிருந்து விழுப்புரம் நகரத்துக்குச் செல்லவும் சுமாா் 5 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

மேலும் கண்டமானடியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, மேல்நிலைப் பள்ளி, அஞ்சல் நிலையம், கூட்டுறவு வங்கி உள்ளிட்டவைகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனா். மூடப்பட்ட ஜானகிபுரம் ரயில்வே கேட்டை மீண்டும் திறக்கக் கோரி கண்டமானடி கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தும், சாலை மறியல் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஜானகிபுரம், கண்டமானடி கிராம மக்கள், தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்ட த்தில் ஈடுபட்டனா். மேலும் மக்களவைத் தோ்தலைப் புறக்கணிக்க போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனா். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையெனில், ஏப்ரல் 3-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூறியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com