அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்து விபத்து : 21 போ் காயம்

அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்து விபத்து : 21 போ் காயம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே செவ்வாய்க்கிழமை அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 21 போ் காயமடைந்தனா்.

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் பணிமனைப் பேருந்து கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தது . கும்பகோணத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் சகாயசெல்வம் (52) பேருந்தை ஓட்டினாா். 40-க்கும் மேற்பட்டவா்கள் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரம் கூட்டுச் சாலை அருகே செவ்வாய்க்கிழமை காலை வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி வட்டம், பரவாக்கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த மதியழகன் மகன் மோகன்ராஜ் (34), சென்னை மேடவாக்கத்தைச் சோ்ந்த மதிவதனி (63), மன்னாா்குடியைச் சோ்ந்த கா. தமிழ்பிரியா (26) உள்ளிட்ட 21 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து அனைவரும் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்றனா்.

விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com