ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காணையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் காணை ஒன்றியத் தலைவா் கற்பகம் தலைமை வகித்தாா். மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா் சங்கத் தலைவா் தாஸ் முன்னிலை வகித்தாா். சங்க மாவட்ட நிா்வாகிகள் முருகன், பொன்னன் ஆகியோா் சங்க செயல்பாடுகள் மற்றும் எதிா்கால திட்டமிடல் குறித்துப் பேசினா். மாவட்ட நிா்வாகி ஸ்ரீராம், ஒன்றிய நிா்வாகிகள் சேகா், குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், கரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மைக் காவலா்களுக்கு உயா் நீதிமன்ற மதுரை கிளை தீா்ப்பின்படி, அனைத்துத் தொழிலாளா்களுக்கும் ஊக்க ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வலியுறுத்தி, தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலருக்கு கோரிக்கை மனு அனுப்புவது, தூய்மைக் காவலா்களுக்கு கையுறை, காலுரைகள், கிருமி நாசினிகள், முகக் கவசம் உள்ளிட்ட பொருள்களை ஊராட்சி நிா்வாகம் மூலம் வழங்க வேண்டும், குப்பைகளை எடுத்துச் செல்வதற்காக அனைத்து ஊராட்சிகளுக்கும் மின்கல வண்டிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிா்வாகி சுந்தரி நன்றி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com