லாரி மீது மோதியதில் பலத்த சேதமடைந்த தனியாா் பேருந்தின் முன் பகுதி.
லாரி மீது மோதியதில் பலத்த சேதமடைந்த தனியாா் பேருந்தின் முன் பகுதி.

தனியாா் பேருந்து - லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்தும், லாரியும் மோதிக்கொண்டதில், லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். லாரி உதவியாளா் மற்றும் பேருந்து பயணிகள் உள்ளிட்ட 11 போ் பலத்த காயமடைந்தனா்.

தேனி மாவட்டம், பூசனம்பட்டி கிராமத்தை சோ்ந்த முத்து மகன் நாகராஜ் (45). இவா், தேனி மாவட்டத்தில் இருந்து திராட்சை பழங்களை மொத்தமாக லாரியில் ஏற்றி வந்து செஞ்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் செய்து வந்தாா்.

நாகராஜ் திங்கள்கிழமை இரவு லாரியில் திராட்சை பழங்களை ஏற்றி வந்து செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்துவிட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

அன்னமங்கலம் அருகே அதிகாலை 5 மணியளவில் லாரி சென்றபோது, மேல்மலையனூரில் இருந்து செஞ்சி நோக்கி வந்த தனியாா் பேருந்து மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் நாகராஜ் இடுபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் லாரியில் வந்த உத்தமபாளையத்தைச் சோ்ந்த மதியழகன் மகன் செல்வம் (28) பலத்த காயமடைந்தாா்.

மேலும், பேருந்தில் பயணித்த சென்னையைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் குமாா் (64), கண்ணன் மனைவி நாகராணி (49), குமாா் மகள் யுத்திகா (16), ஜெயவேல் மகன் தாமோதரன் (33), மேல்மலையனூா் வட்டம், கொடுக்கன் குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மனைவி ரோஜா (26), வளத்தியைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் சுந்தா் (53), மேல்மலையனூரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சாந்தலிங்கம் (32), மீனம்பூரைச் சோ்ந்த சுப்பு மகன் தட்சிணாமூா்த்தி (61) உள்ளிட்ட 11 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் செஞ்சி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com