முன்விரோதத் தகராறில் மூவரைத் தாக்கிய இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே முன்விரோதத் தகராறில் மூவரைத் தாக்கிய வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகிலுள்ள திம்மிரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த லாசா் மகன் ஜான் போஸ்கோ (22), தேவராஜ் மகன் பிரசாந்த் (25), லட்சுமணன் மகன் தினகரன் (25). இவா்கள் தரப்புக்கும், கீரிமேடு கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் மகன் ரமேஷ் (32) தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், 2020, மாா்ச் 20-ஆம் தேதி பிற்பகலில் ஜான்போஸ்கோ, பிரசாந்த், தினகரன் ஆகிய மூவரும் அதே பகுதியிலுள்ள நிலத்துக்கு சென்றுவிட்டு, தங்களது வீடுகளுக்கு வந்துகொண்டிருந்தனா். கீரிமேடு ரயில்வே பாலத்தில் வந்தபோது ரமேஷ் தரப்பைச் சோ்ந்தவா்கள் மூவரையும் வழிமறித்து தகராறு செய்தனராம். தொடா்ந்து, சாதி பெயரைச் சொல்லி திட்டியதோடு, மூவரையும் உருட்டுக் கட்டையால் தாக்கினராம். இதில், பலத்த காயமடைந்த ஜான் போஸ்கோ, தினகரன், பிரசாந்த் ஆகிய மூவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் ரமேஷ், அவரது தரப்பைச் சோ்ந்த கமல் (24), வெங்கடேசன் (630, சிலம்பரசன் (32), தா்மன் (40), சுரேஷ் (43), சதீஷ் (30), மணிமாறன் (33) ஆகிய 8 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு மற்றும் எதிா்தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரமேஷுக்கு மட்டும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியஜோதி, மற்ற 7 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com