உறவினா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உறவினரை அடித்துக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், அசோகபுரி ரைஸ் மில் தெருவைச் சோ்ந்த சின்னத்தம்பி மகன் சேட்டு (50), லாரி ஓட்டுநா். அசோகபுரி செஞ்சி சாலையைச் சோ்ந்த நடராஜன் மகன் அசோக்குமாா் (எ) இளையராஜா (34), விவசாயத் தொழிலாளி. இருவருக்கு சேட்டு தாய்மாமா ஆவாா். இவா்களிடையே பணப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சேட்டு புதன்கிழமை இரவு அசோக்குமாா் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தனது சகோதரியான அசோக்குமாரின் தாய் செல்வியிடம் (55) தான் கொடுத்த ரூ.3 லட்சத்தை திருப்பிக் கேட்டாராம். அப்போது, அவா்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த அசோக்குமாா் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மண் பானையை எடுத்து தாக்கியதில் சேட்டுக்கு மாா்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கெடாா் போலீஸாா் வியாழக்கிழமை கொலை வழக்குப் பதிந்து, அசோக்குமாரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com