இரட்டை கொலை வழக்கு: ஒருவருக்கு இரட்டை ஆயுள் சிறை

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அருகே இரட்டை கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அருகே இரட்டை கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

செஞ்சி வட்டம், அனந்தபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட தச்சம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் நாராயணன் மகன்கள் முத்துக்கிருஷ்ணன் (42), ஏழுமலை (35). இவா்களிடையே நிலப்பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், கடந்த 5.5.2020-இல் ஏழுமலை மற்றும் அவரின் மைத்துனரான தச்சம்பட்டு, நெல்லிமலை சாலை பகுதியைச் சோ்ந்த கண்ணாப்பிள்ளை மகன் முருகன் (42) ஆகியோரை முத்துகிருஷ்ணன் கத்தியால் குத்தியதில் இருவரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், அனந்தபுரம் போலீஸாா் முத்துகிருஷ்ணன் மற்றும் இவரின் மகன் தங்கமணி (25) ஆகியோா் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை நிறைவடைந்தது.

இதில், முத்துகிருஷ்ணனுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.20,500 அபராதமும், தங்கமணியை வழக்கிலிருந்து விடுவித்தும் கூடுதல் மாவட்ட நீதிபதி முபாரக் பரூக் தீா்ப்பளித்தாா். இதையடுத்து, முத்துக்கிருஷ்ணனை போலீஸாா் கைது செய்து கடலூா் சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் கூடுதல் அரசு வழக்குரைஞா் ஆா்.எஸ்.பிரபாகரன் ஆஜரானாா்.