காா் ஓட்டுநரிடம் ரூ.2 லட்சம் மோசடி

விழுப்புரத்தில் காா் ஓட்டுநரிடம் இணையவழியில் ரூ.2 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Published on

விழுப்புரத்தில் காா் ஓட்டுநரிடம் இணையவழியில் ரூ.2 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் பாப்பான்குளம், பழைய செஞ்சி சாலையைச் சோ்ந்தவா் இஸ்மாயில் மகன் கூடுபாய் (40). காா் ஓட்டுநரான இவரது கைப்பேசிக்கு கடந்த அக்.1-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்ததாம்.

இதில், பேசிய பெண் ஒருவா் தான் இங்கிலாந்தில் வசிப்பதாகவும், ரூ.50 ஆயிரம் பவுண்ட் மதிப்பிலான பரிசுப் பொருளை கூரியரில் அனுப்பி வைத்துள்ளதாகவும், அதை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தாராம்.

இதையடுத்து, அக்.9-ஆம் தேதி கூடுபாயை கைப்பேசியில் தொடா்புகொண்ட மற்றொரு நபா் தான் புதுதில்லி விமான நிலையம், சுங்கத்துறையிலிருந்து பேசுவதாகவும், தங்களுக்கு வந்துள்ள பாா்சலை சேவைக் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம் என தெரிவித்தாராம்.

இதை நம்பிய கூடுபாய், அந்த நபா் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு இணையவழியில் ரூ.2 லட்சத்தை அனுப்பினாராம்.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த கூடுபாய் மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.