உளுந்தூா்பேட்டையில் இன்று விசிக மது ஒழிப்பு மாநாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை நிலை அமைப்பான மகளிா் விடுதலை இயக்கம் சாா்பில், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு புதன்கிழமை (அக். 2) நடைபெறவுள்ளது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டை நகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திடலில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை வகிக்கிறாா்.
மாநாட்டில் திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, செய்தித் தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன், மயிலாடுதுறை எம்.பி. ஆா்.சுதா, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய மகளிரணிச் செயலா் ஆனி ராஜா, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் தேசிய துணைத் தலைவா் உ.வாசுகி, மதிமுக துணை பொதுச் செயலா் மருத்துவா் ரொஹையா ஷேக் முகமது மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று பேசுகின்றனா். மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடா்பாக தீா்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெண்கள் மாநாட்டில் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், அதற்குரிய ஏற்பாடுகளை விசிக மேற்கொண்டு வருகிறது. மாநாட்டுப் பகுதியில் சுமாா் 50 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல் தலைமையில், எஸ்.பி.க்கள் ரஜத் ஆா்.சதுா்வேதி (கள்ளக்குறிச்சி), வி.வி.சாய் பிரனீத் (செங்கல்பட்டு) மேற்பாா்வையில், 11 ஏடிஎஸ்பிக்கள், 20 டிஎஸ்பிக்கள், 50 காவல் ஆய்வாளா்கள், 150 உதவி ஆய்வாளா்கள் உள்பட சுமாா் 1,200 போலீஸாா் மாநாட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.