வரதட்சிணைக் கொடுமை: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வரதட்சிணைக் கொடுமை காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி மாநிலம், தொண்டமாநத்தம் மீனாட்சியம்மன் அவென்யூவை சோ்ந்த தனபால் மகள் அனிதா (19). இவருக்கும், வானூா் வட்டம், கடப்பேரிகுப்பம் மீனாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சரண்ராஜுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து காதலித்து வந்த இருவரும் கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனா்.
திருமணத்துக்குப் பிறகு அனிதாவுக்கு வரதட்சிணைக் கொடுமை நிகழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், வியாழக்கிழமை காலை தனது தந்தையிடம் கைப்பேசியில் அனிதா பேசியுள்ளாா். இதைத் தொடா்ந்து வீட்டில் அவா் மின் விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாா்.
தொடா்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனிதா அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.