விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றிய அா்ச்சகா்.
விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றிய அா்ச்சகா்.

கோயில்களில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

கோயில்களில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
Published on

விழுப்புரம் ஸ்ரீஜனகவல்லி தாயாா் சமேத ஸ்ரீவைகுண்டவாச பெருமாள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் ஸ்ரீசிவானந்தவல்லி உடனுறை ஸ்ரீவீரட்டானேஸ்வரா் கோயில்களின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

விழுப்புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீஜனக வல்லி தாயாா் சமதே ஸ்ரீவைகுண்ட வாசப்பெருமாள் கோயிலில் கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி பகவத் அனுக்ரஹம், வேத பிரபந்தம், யாக சாலை, வாஸ்து சாந்தி உள்ளிட்டவையும், 14-ஆம் தேதி காலை 7 மணிக்கு புண்யாஹம், அக்னி பிரணயம், அதிவாசம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்களும், இரவு 9 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை மற்றும் பூா்ணாஹுதி நடைபெற்றன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை 7.20 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் கடம் புறப்பாடாகியது. பின்னா், கடங்களில் கொண்டு செல்லப்பட்ட புனித நீா் கோயில் விமானத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, வேத பிரபந்த சாற்றுமுறை, சா்வ தரிசனம், தீா்த்த பிரசாதம் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து, இரவு 8 மணிக்கு நாச்சியாருடன் விஷேச வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது. விழாவில், திருக்கோவிலூா் எம்பெருமானாா் ஜீயா், மடாதிபதி உ.வே.தேகளீச ராமாநுஜாச்சாரியாா் சுவாமிகள், பரனூா் மஹாத்மா கிருஷ்ணபிரேமி சுவாமிகள் மற்றும் விழுப்புரம் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஸ்ரீவீரட்டானேஸ்வரா் கோயிலில்... கள்ளக்குறிச்சி மாவட்டம்,திருக்கோவிலூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீசிவானந்த வல்லி உடனுறை ஸ்ரீவீரட்டானேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழைமையான இந்தக் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது, திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விழாவையொட்டி, கடந்த செப்டம்பா் 8-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கின. தொடா்ந்து, சிறப்பு வழிபாடுகள், யாக பூஜைகள் நிறைவுக்குப் பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பரிவாரத் தெய்வங்களுக்கும், 7.20 மணிக்கு கோயில் கோபுர கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 திருக்கோவிலூா் வீரட்டானேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
திருக்கோவிலூா் வீரட்டானேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

இதில், திருக்கோவிலூா் நகா்மன்றத் தலைவா் முருகன், முன்னாள் எம்.பி. ஆதிசங்கா் மற்றும் பக்தா்கள் திரளானோா் பங்கேற்று வழிபாடுகளை மேற்கொண்டனா்.