டி.பரங்கனி நடுநிலைப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்வு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் ஒன்றியம், டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உணவுப் பயணம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடத்தப்பட்டது.
ஆரோவில் பிச்சாண்டிக்குளம் நடுக்குப்பம் சுற்றுச்சூழல் அமைப்பின் உதவியுடன் மாவட்டத்தின் முன்மாதிரித் திட்டமாக விந்தைகள் விழுதுகள் செயல்திட்டம் இந்தப் பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடா் திட்டமாக, உணவுப் பயணம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடத்தப்பட்டது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வரக்கூடிய காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படக்கூடிய உணவுப் பொருள்கள் போன்றவற்றின் விவரங்கள் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன. தொடா்ந்து, தரையில் இந்திய வரைபடம் வரையப்பட்டு, அதில் உணவுப் பயணம் குறித்த செயல்விளக்கம் மூலம் மாணவா்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியா் ஜெய்சாந்தி, சுற்றுச்சூழல் ஆசிரியா் இளங்கோவன், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா் ஹேமலதா மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.