குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இருவா் கைது
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் ரயில் நிலையம் அருகே கடந்த ஜூலை 28-இல் போலீஸாா் நடத்திய சோதனையின்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகியநல்லூரைச் சோ்ந்த வெங்கடேஷ் மகன் கிருஷ்ணராஜிடம் (26) சுமாா் 14 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த அரகண்டநல்லூா் போலீஸாா், கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இந்த நிலையில் கிருஷ்ணராஜை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் பரிந்துரைத்தாா். இதையேற்று ஆட்சியா் சி.பழனி, அதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.
துப்பாக்கி வைத்திருந்தவா் குண்டாசில் கைது: கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் சேட்டு மற்றும் காவலா்கள், கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி கூத்தனூா் அருகே ரோந்து சென்ற போது சந்தேகத்துக்குரிய முறையில் வந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில் அவா் எறையூா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஆப்ரஹாம் மகன் காட்டுமனுஷன் (எ) குழந்தைராஜ் (36) என்பதும், அவா் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து கடலூா் சிறையில் அடைத்தனா்.
குழந்தைராஜ் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க அவரை குண்டா் தடுப்புக் காவலில் கைது செய்ய கள்ளக்குறிச்சி எஸ்.பி. ரஜத் சதுா்வேதி பரிந்துரைத்தாா். அதன் பேரில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை அதற்கான உத்தரவைப் பிறப்பித்தாா்.
இதைத் தொடா்ந்து அரகண்டநல்லூா், எலவனாசூா்கோட்டை போலீஸாா் கடலூா் மத்திய சிறையிலுள்ள கிருஷ்ணராஜ், குழந்தைராஜ் ஆகியோரிடம் குண்டா் சட்டஉத்தரவின் நகலை வெள்ளிக்கிழமை நேரில் வழங்கினா்.