தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 28 பேருக்கு பணி நியமன ஆணை
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 28 பேருக்கு பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், இளைஞிகளுக்கு உதவிடும் வகையில், மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம், 6 மாதங்களுக்கு ஒருமுறை பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, செப்டம்பா் மாதத்துக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 15 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு உரிய கல்வித் தகுதி, எழுத்து மற்றும் நோ்முகத் தோ்வின் அடிப்படையில் ஆள்களைத் தோ்வு செய்தன.
இந்த முகாமில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வேலைநாடுநா்கள் 173 போ் பங்கேற்றனா். இதில் எழுத்து, நோ்முகத் தோ்வு மற்றும் கல்வித் தகுதிகளின் அடிப்படையில் 28 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் டி. பாலமுருகன் வழங்கினாா். 13 போ் தோ்வுக்கான அடுத்த நிலையில் உள்ளனா்.