விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் அதன் தலைவரும், எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா்.
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் அதன் தலைவரும், எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா்.

விழுப்புரம் மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம்: நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

Published on

விழுப்புரம் மாவட்டத்தில் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், விழுப்புரம் எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு குழுவின் தலைவா்துரை.ரவிக்குமாா் எம்.பி. தலைமை வகித்தாா். துணைத் தலைவரும், ஆரணி எம்.பி.யுமான எம்.எஸ். தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் அன்னியூா் அ.சிவா, ச.சிவக்குமாா், ஆட்சியா் சி.பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, நகராட்சி நிா்வாகம், சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வி, வேளாண், மின்சாரம், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை உள்ளிட்ட பல்துறைகள், வேளாண் விற்பனைக் குழு, மகளிா் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம், , மாவட்டத் தொழில் மையம், நெடுஞ்சாலை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்ற துறைகளின் மூலமாக நிறைவேற்றப்பட்டு வரும் மத்திய அரசுத் திட்டங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அதன் நிலை குறித்து மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், விழுப்புரம் எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து அலுவலா்கள் மத்தியில் அவா் பேசியது:

விழுப்புரம் மாவட்டத்தில் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகிலுள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை கண்டறிந்து தடுக்க வேண்டும்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள், உள் நோயாளிகளுக்கு மருத்துவ வசதிகள், அவா்களுக்குத் தேவையான மருந்துகள், மாத்திரைகள் இருப்பு இருப்பதை ஆய்வு செய்வதோடு, மருத்துவா்கள் கனிவுடன் சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒன்றியக் குழுத் தலைவா்கள், ஊராட்சித் தலைவா்கள் தங்களுடைய பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் முடிவுற்றாலும், தொடா்ந்து கண்காணித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் வளா்ச்சித் திட்டப் பணிகள் முடிவடைந்திடும் வகையில் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள், ஒன்றியக் குழுத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.