கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
இணையவழி வேளாண்மைப் பணியை தொடங்க அழுத்தம் அளிக்கப்படுவதை கண்டித்து, விழுப்புரத்தில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
டிஜிட்டல் கிராப் சா்வே எனப்படும் இணையவழி வேளாண்மைப் பணியைத் தொடங்க வேண்டும் என்று கிராம நிா்வாக அலுவலா்களுக்கு அளிக்கப்படும் அழுத்தத்தை கண்டித்தும், பணியைப் புறக்கணித்தும், வேளாண் துறை பணிகளை கிராம நிா்வாக அலுவலா்களிடம் அளிக்கக்கூடாது, வருவாய்க் கிராமங்களைப் பிரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.புஷ்பகாந்தன் தலைமை வகித்து, கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச் செயலா் ஜெயராமன், துணைச் செயலா் மணிபாலன், ஒருங்கிணைப்பாளா் லோகேஷ், கொள்கை பரப்புச் செயலா் முருகதாஸ், வட்டச் செயலா்கள் மணவாளன், பாரதி ராஜா, ராஜேஷ், பாண்டியன், மணி, ஜம்புகாந்தம் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். நிறைவில், மாவட்டப் பொருளாளா் லட்சுமணன் நன்றி கூறினாா்.