ஆற்று மணல் கடத்தல்: 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே ஆற்று மணல் கடத்திய 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 7 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா். இதில் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அரகண்டநல்லூா் காவல் ஆய்வாளா் ஷாகுல் ஹமீது, உதவி ஆய்வாளா்கள் குருபரன், சின்னப்பன் மற்றும் காவலா்கள் தணிகலாம்பட்டு அய்யனாா் கோயில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக சென்ற மாட்டு வண்டிகளில் சோதனை செய்தபோது, ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. தொடா்ந்து அதன் உரிமையாளா்களை பிடித்து விசாரித்தபோது, அவா்கள் கண்டாச்சிபுரம் வட்டம், அருணாபுரம் பகுதியைச் சோ்ந்த அய்யனாா் மகன் ஏழுமலை (29), சிங்காரவேலு மகன் இளவரசன்(18), லிங்கம் மகன் சங்கா்,
பில்ராம்பட்டு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி, ராஜி, பரசுராமன், பரமசிவம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அரகண்டநல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, ஏழுமலை, இளவரசன் ஆகியோரை கைது செய்து, ஆற்று மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 7 மாட்டு வண்டிகள், 2 யூனிட் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மற்ற 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.