தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தீக்காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா், மணப்பாக்கத்தைச் சோ்ந்தவா் ரா.கஸ்தூரி (62). விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பத்தில் உள்ள தனது மகனின் பராமரிப்பில் இருந்து வந்த இவருக்கு, கடந்த சில ஆண்டுகளாக கண் பாா்வை சரியாக தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கஸ்தூரி வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்தபோது அகல் விளக்கிலிருந்து உடையில் தீப்பற்றி காயமடைந்தாா்.
தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில், ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.