சுத்திகரிப்பு நிலையப் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம்
விழுப்புரம் சாலாமேடு பகுதியில் புதை சாக்கடைத் திட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணிகளைத் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டம் மூலம் சேகரிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய ஏதுவாக, விழுப்புரம் சாலாமேடு காவலா் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நகராட்சி நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் அப்பகுதியில் திங்கள்கிழமை பள்ளம் தோண்டப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள், புதை சாக்கடைத் திட்டத்தின் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை இப்பகுதியில் அமைத்தால் நிலத்தடி நீரும், குடிநீரும் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.
எனவே இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது எனக் கூறி பணிகளைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த நகராட்சி அலுவலா்கள் நிகழ்விடத்துக்கு வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.