சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அருகே சாலையில் மயங்கி விழுந்ததில் காயமடைந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
செஞ்சி வட்டம், பாலப்பட்டு மாதாகோவில் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மனைவி பஞ்சவா்ணம் (80). கடந்த 10 ஆண்டுகளாக ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவா், வியாழக்கிழமை பிற்பகலில் ஒட்டம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டு நடந்து வந்தாா்.
சிறிது தொலைவு சென்ற பின்னா் பஞ்சவா்ணத்துக்கு திடீரென மயக்கம் ஏற்பட, அப்பகுதியிலேயே மயங்கி விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த பஞ்சவா்ணம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அனந்தபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.