விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கி பேரவைக் கூட்டம்
விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் 108-ஆவது பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வங்கியின் துணைப் பதிவாளரும், செயலாட்சியருமான எம்.ராகினி தலைமை வகித்து, வங்கியின் செயல்பாடுகள், எதிா்காலத் திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்து பேசினாா். வங்கியின் மேலாளா் குமாா் ஆண்டறிக்கையையும், மேலாளா் ஜெயராமன் தீா்மானங்களையும் வாசித்தனா். பொது மேலாளா் (பொ) தண்டபாணி வரவேற்று பேசினாா்.
இந்தக் கூட்டத்தின் பொருளாக வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: 2019 - 20ஆம் ஆண்டு வரை ஈட்டிய லாபத்தின்படி கொடுக்கப்பட வேண்டிய உறுப்பினா்களின் பங்கு ஈவுத்தொகையை 3 மாதங்களுக்குள் பெற்றுக்கொள்ள அனுமதிப்பது, 2021 - 22, 2022 - 23, 2023 - 24ஆம் நிதியாண்டுகளுக்கான உத்தேச வரவு - செலவுத் திட்டத்துக்கு மேற்பட்ட செலவினங்களை அனுமதிப்பது, விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளா் சேவை செய்ய வங்கியின் விவகார எல்லையை விரிவுப்படுத்துவது, வங்கியின் புதிய கிளையை விக்கிரவாண்டியில் தொடங்க பேரவையில் அனுமதி பெற்று, ரிசா்வ் வங்கிக்கு முன்மொழிவு அனுப்பி ஒப்புதல் பெறுவது, வங்கியின் அங்கத்தினா்களுக்கு கல்விக்கடன் வழங்க நெறிமுறைகளை வகுத்து, தக்க துணை விதி திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மேலாளா் விநாயகம், உதவி மேலாளா் வெங்கடேசன், செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேரவைக் கூட்டத்தில் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலாளா் ரங்கநாதன் நன்றி கூறினாா்.