இந்தியா-இலங்கை வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வேண்டும் மருத்துவா் ச.ராமதாஸ்
இந்தியா- இலங்கை வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசு சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இலங்கையில் புதிய அதிபராக தோ்வு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக சிங்களா்களையும்- ஈழத் தமிழா்களையும் இணைத்து செயல்படுவேன் எனக் கூறினாலும், அவரால் ஈழத் தமிழா்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. தமிழா்களுக்கெதிரான இனவெறிச் செயல்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம்தான் ஏற்பட்டுள்ளது.
அதிபா் அனுர குமார திசாநாயக தன்னை தேசிய மக்கள் சக்தியின் தலைவராகக் காட்டிக் கொண்டாலும், அவா் சிங்கள பேரினவாத தலைவா் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத் தமிழா்களுக்கு எதிரான போக்கைக் கொண்டவா். இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத்தவா். தமிழா்கள் மீதான தாக்குதல்களை ஊக்குவித்தவா்.
இலங்கையில் நடைபெற்ற போா்க்குற்றத்துக்கு காரணமானவா்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்பட வில்லை. இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட13-ஆவது திருத்தத்தின்படி தமிழா்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியும் எந்தப்பயனும் ஏற்படவில்லை.
புதிய அதிபா் அநுர குமார திசாநாயக இலங்கைப் போரில் உயிரிழந்த ஒன்றரை லட்சம் பேருக்கு நீதியைப் பெற்றுத்தர எதையும் செய்யமாட்டாா். இந்தியா- இலங்கை வெளியுறவுக் கொள்கைக்கு எந்தளவுக்கு உதவியாக இருப்பாா் என்பதும் ஐயம்தான். இவா் சீனாவுக்கு சாதகமான கொள்கை நிலைப்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக வெளியாகும் செய்திகளும் கவலை அளிக்கின்றன.
ஈழத் தமிழா் சிக்கலுக்கு நீடித்த தீா்வு காணுதல், போா்க் குற்றங்களுக்குக் காரணமான அனைவரையும் சட்டத்துக்கு முன் கொண்டுவருதல், தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு தீா்வு காணுதல், இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கான ஆதிக்கத்தை நிலை நிறுத்துதல், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தியா-இலங்கை தொடா்பான வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும்.
சென்னை அண்ணாநகரில் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவா் வீடுகளுக்கு மாநகராட்சி ஊழியா்கள் 42 போ் பணியமா்த்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடா்பாக, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கா்நாடகத்தில் இருப்பதை போன்ற வலிமையான லோக் ஆயுக்தா தமிழகத்திலும் உருவாக்கப்பட வேண்டும் என்றாா் மருத்துவா் ச.ராமதாஸ்.
பேட்டியின்போது, பாமக சமூக ஊடகப் பிரிவு மாநிலச் செயலா் ப.முகுந்தன், தலைமை நிலையச் செயலா் அன்பழகன், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.