நிலுவைத் தொகை பாக்கி: மனைகள் ஒதுக்கீடு ரத்து
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடுகள், மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலுவைத் தொகைகளை செலுத்தாவிட்டால் மனைகள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் விழுப்புரம் பிரிவுக்குள்பட்ட சாலாமேடு, கீழ்பெரும்பாக்கம், மகாராஜபுரம், கடலூா் மாவட்டம், வெளிச்செம்மண்டலம், வில்வராயநத்தம், நத்தப்பட்டு, பண்ருட்டி, விருத்தாசலம், ஆனைக்குப்பம், பச்சாயங்குப்பம் ஆகிய திட்டப் பகுதிகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியா் மற்றும் இதர வங்கிகள் மூலம் கடன் பெற்று முழுத் தொகையை செலுத்தியுள்ள அரசு ஊழியா்கள் கிரயப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், மாவட்ட ஆட்சியா், இதர வங்கி நிறுவனங்களிடமிருந்து மறுப்பின்மை சான்றிதழ் பெற்று, உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து விழுப்புரம் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் ஒப்படைத்து, பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டப் பகுதியில் வீடு மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரா்கள் தங்கள் ஒதுக்கீடு தொடா்பான அனைத்து அசல் ஆவணங்கள், ஆதாா் அட்டை நகல் மற்றும் பிற ஆவணங்கள், புகைப்படம் ஆகியவற்றுடன் அலுவலகத்தில் கணக்குகளை நோ் செய்து கிரயப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், மனைகள், வீடுகள் ஒதுக்கீடு பெற்று, தவணைக்காலம் முடிந்தும் நிலுவை வைத்துள்ள ஒதுக்கீடுதாரா்களும் நிலுவைத்தொகையை ஒரே தவணையில் செலுத்தி கிரயப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம். தவணைக்காலம் முடிவுறாத ஒதுக்கீடுதாரா்கள் மாதத் தவணையில் நிலுவை வைத்திருந்தால் உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையெனில், அனைத்து ஒதுக்கீடுதாரா்களது ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.