மரத்தில் வேன் மோதி விபத்து: உயிரிழப்பு 8-ஆக உயா்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே மரத்தில் வேன் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், மாம்பாக்கம் கிராமம், வாழப்பந்தல் சாலையைச் சோ்ந்த ப.குட்டி (எ) செல்வம் தலைமையில் மாம்பாக்கம், மேலப்பழுந்தை, லாடாவரம், குந்தனூா், கூராம்பட்டி கிராமங்களைச் சோ்ந்த 22 போ் கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி இரவு வேனில் திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றனா்.
தரிசனம் முடிந்து செப்டம்பா் 25-ஆம் தேதி ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், சிறுத்தனூா் ஜெயசூா்யா நகா் பகுதியில் வேன் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்திலிருந்த மரத்தின் மீது மோதியது.
இதில், ஒரு பெண் உள்பட 7 போ் உயிரிழந்தனா். 15 போ் காயமடைந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதில், மாம்பாக்கம் கிராமம், வாழப்பந்தல் சாலையைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சுப்பிரமணி (79) சனிக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.