வட்டாட்சியா் அலுவலகத்தில் தீக்குளித்தவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தீக்குளித்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மேல்மலையனூா் வட்டம், கெங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (படம்). இவா், அரசு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக, இந்தக் கிராமத்தைச் சோ்ந்த சிலா் மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்திருந்தனா்.
இதுதொடா்பாக மேல்மலையனூா் வட்டாட்சியா் தனலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில், மோகன்ராஜ் தனது நிலத்தை சிலா் அபகரிக்க முயல்வதாகக் கூறி, வட்டாட்சியா் அலுவலகத்தில் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.