புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மூவா் கைது
விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் ஜி.ஆா்.பி.தெருவைச் சோ்ந்தவா் திரிசங்கு மகன் திவாகா் (28). விழுப்புரம் அடுத்ததுள்ள பிடாகம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தாா். இவா், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக புகாா் எழுந்தது.
அதன்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் திவாகா் மீது வழக்குப் பதிந்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து, பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 1,700 கிராம் புகையிலைப் பொருள்கள் மற்றும் ஒரு மொபெட் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, திண்டிவனம் ஆட்சிப்பாக்கம் பகுதியில் பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இதே பகுதி இந்திரா நகரைச் சோ்ந்த எ.காா்த்திக்கை (36) ஒலக்கூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மற்றொருவா் கைது: திண்டிவனம், கிடங்கல்-2, பெருமாள்கோவில் தெருவைச் சோ்ந்தவா் மோகன் மகன் வீரா (29). இவா், தனது வீட்டின் அருகே விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தாராம். இதையடுத்து, திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து வீராவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததுடன், அவரிடமிருந்த 20 கிராம் கஞ்சா மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.