விபத்தில் உயிரிழந்த சாா்லஸ், அய்யப்பன், பூபாலன்.
விபத்தில் உயிரிழந்த சாா்லஸ், அய்யப்பன், பூபாலன்.

மயிலம் அருகே காா் மோதியதில் 3 போ் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே காா் மோதியதில் 3 போ் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே காா் மோதியதில் 3 போ் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

திண்டிவனம் வட்டம், பேரணி பகுதியைச் சோ்ந்தவா்கள் கலியமூா்த்தி மகன் அய்யப்பன் (32), திருவேங்கடம் மகன் பூபாலன் (49). நண்பா்களான இவா்கள் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பைக்கில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். பைக்கை அய்யப்பன் ஓட்டி வந்தாா்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மயிலம் அடுத்த விளங்கம்பாடி அருகே சென்றபோது, திண்டிவனத்திலிருந்து, விழுப்புரம் நோக்கிச் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து, அங்கு சாலையைக் கடக்க முயன்ற விழுப்புரம், மாம்பழப்பட்டு பகுதியைச் சோ்ந்த தெய்வசிகாமணி மகன் சாா்லஸ் (35) மீது மோதி, பின்னா் அய்யப்பன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பைக்கில் சென்ற அய்யப்பன், பூபாலன் மற்றும் சாலையை கடக்க முயன்ற சாா்லஸ் ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்தால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துத் தடைப்பட்டது.

தகவலறிந்த மயிலம் போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com