1,200 ஆண்டுகள் பழைமையான அரிய தவ்வை சிற்பம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரிய தவ்வை சிற்பம் கண்டறியப்பட்டது.
செஞ்சி வட்டம், அப்பம்பட்டு கிராமத்தில் விழுப்புரத்தை சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன், செஞ்சி ஆா்.வாசுதேவன் ஆகியோா் அண்மையில் கல்வெட்டு ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது, அந்த கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தவ்வை சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் கூறியதாவது:
அப்பம்பட்டு ஏரிக்கரையில் பச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள சிற்பத்தை ஆய்வு செய்தபோது, அது மூத்ததேவி, தவ்வை அதாவது வடமொழியில் ஜேஷ்டா என்றும் அழைக்கப்படும் தெய்வமாகும்.
மிகுந்த கலையம்சங்களுடன் வடிக்கப்பட்டுள்ள இந்த தவ்வைச் சிற்பம் பல்லவா் கால சிற்பக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. இதன்காலம் கி.பி. 8-9-ஆம் நூற்றாண்டாகும். சுமாா் 1,200 ஆண்டுகளை கடந்தும் அப்பம்பட்டு கிராமத்தில் தமிழா்களின் தாய்த்தெய்வமாக தவ்வை வழிபாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. செஞ்சி பகுதியில் பல்வேறு இடங்களிலும் தவ்வைச் சிற்பங்கள் காணப்படுகிறது. இந்தத் தெய்வத்தின் வழிபாடு பல்லவா் காலத்தில் சிறந்திருந்தது என்பதை காட்டுகிறது என்றாா்.