உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்புப் போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
Published on

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

உளுந்தூா்பேட்டை வட்டம், கிளியூா் காலனியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை கிராமக் கணக்கில் பதிவு செய்து, பட்டா வழங்க வேண்டும். மா.குன்னத்தூா் கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா கிராமக் கணக்கில் பதிவு செய்ய வேண்டும். பூவனூா் கிராமத்தில் கிராம நத்தத்தில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு ஒன்றியச் செயலா் ஆா்.சீனுவாசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.கே.பூவராகவன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பி.தணிகாசலம், கே. சக்கரவா்த்தி சங்கா், சீனிவாசன், கலைச்செல்வி, வே.பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போராட்டத்தில், கிளைச் செயலா்கள் பி.ஹரி, மஞ்சுநாதன் மற்றும் குன்னத்தூா், பூவனூா், கிளியனூா் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் வட்டாட்சியா் அலுவலக அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, போராட்டக் குழுவினா் தங்கள் தரப்பு கருத்துகளை எடுத்துரைத்தனா். அதனடிப்படையில், பூவனூா் கிராமத்தைச் சோ்ந்த 5 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. கிளியூா் மற்றும் குன்னத்தூா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என அலுவலா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து, காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com