பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்!

Published on

திமுக தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக பள்ளிகளில் பணிபுரியும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியா்கள் பணி நிரந்தரமின்றி உள்ளனா். இந்த நிலையில், கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த 181-ஆவது வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும்.

கடந்த 2021 முதல் 2024 வரை தமிழக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில் பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே, நிகழாண்டில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதி நிலை அறிக்கையில் பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 7,024 நடுநிலைப்பள்ளிகள், 3,135 உயா்நிலைப்பள்ளிகள், 3,110 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 13,269 பள்ளிகள் உள்ளன. இதில், ஒரு பள்ளிக்கு ஒரு சிறப்பாசிரியா் வீதம் பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையில் 47 ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்தது போல, 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியா்களையும் பணி நிரந்தரம் செய்து முதல்வா் ஆணையிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com