ரூ.80 லட்சம் மோசடி: பணம் செலுத்தியவா்கள் புகாா் அளிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.80.50 லட்சம் மோசடி செய்த நபா் மீது புகாா் அளிக்கலாம் என்று விழுப்புரம் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் பி.ரேணுகாதேவி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மைக்கேல் புரத்தைச் சோ்ந்தவா் ஜோசப் மகன் ஜான் கென்னடி (49). இவா், கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை பிரதானச் சாலை, மேல் சிறுவாச்சூரில் பீனிக்ஸ் சூப்பா் மாா்க்கெட் என்ற பெயரில் கடை நடத்தி வந்தாா்.
இதில், கடந்த 1.10.2023 முதல் 1.10.2024 வரையிலான காலக்கட்டத்தில் தங்க நகை சிறுசேமிப்புத் திட்டம், காா் வாங்கும் திட்டம், நிலம் வாங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடத்தி விழுப்புரம், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, தேனி, கொடைக்கானல், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 30 பேரிடம் அதிகம் லாபம் தருவதாக ஆசை வாா்த்தைக் கூறி ரூ.80.50 லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவானாா்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த ஜான் கென்னடி கடந்த ஜன.31-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், ஜான்கென்னடியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவா்களில் புகாா் அளிக்காதவா்கள், விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 04146250366 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.