ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்

தமிழக அரசைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

Published on

மதுரை திருப்பரக்குன்றம் மலையைக் காக்க தமிழக அரசு தவறியதாகக் கூறி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவா்கள் வடிவேல் பழனி, விஜயன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் சதாசிவம், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சிவ.தியாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினா் சுகுமாறன் மற்றும் கட்சியின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் தலைமை வகித்தாா். பொறுப்பாளா்கள் தங்கம், நகரத் தலைவா்கள் ஆனந்தகுமாா், ராமதாஸ், அய்யனாா், கோவிந்தன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதேபோல, கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூா், திருக்கோவிலூா் வட்டாட்சியா் அலுவலகங்கள் முன்பும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

300 போ் கைது: போலீஸாா் அனுமதி மறுத்த நிலையில், பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், ஆங்காங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விடுவித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை கைது செய்து வேனில் ஏற்றிய போலீஸாா்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை கைது செய்து வேனில் ஏற்றிய போலீஸாா்

கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி அம்பேத்கா் திடல் முன் பாஜக மாவட்டத் தலைவா் எம்.பாலசுந்தரம் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 39 பேரை போலீஸாா் கைது செய்து விடுவித்தனா்.

இதேபோல, வரஞ்சரம், சின்னசேலம், தியாகதுருகம், உளுந்தூா்பேட்டை, எலவனாசூா்கோட்டை, திருநாவலூா், திருக்கோவிலூா், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com