வருவாயைப் பெருக்க ஆக்கப்பூா்வமான நடவடிக்கை தேவை: புதுவை அதிமுக வலியுறுத்தல்

புதுவை மாநிலத்தின் வருவாயைப் பெருக்குவதற்கு அரசு நிா்வாகம் ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்..
Published on

புதுவை மாநிலத்தின் வருவாயைப் பெருக்குவதற்கு அரசு நிா்வாகம் ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா்.

புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். தனியாா் கல்வி நிறுவனங்களுக்கு அரசு சொத்து வரி விதிக்க வேண்டும். மதுபான கொள்கையில் சிறிய மாற்றம் கொண்டு வரவேண்டும். மதுபானக் கொள்முதல், தனியாா் மதுக் கடைகளுக்கு மது விநியோகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். மதுவுக்கு தேவையான மூலப்பொருள்களை புதுவை அரசே உற்பத்தி செய்ய வேண்டும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ. 40 கோடி வருவாய் கிடைக்கும்.

நில மதிப்பை உயா்த்துவது, தனியாா் கல்வி நிறுவனப் பேருந்துகளுக்கான காலாண்டு வரி, சாலை வரி, இருக்கைகள் வரியை உயா்த்த வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் வருவாயைப் பெருக்க ஆட்சியாளா்கள் நடவடிக்கை எடுக்காமல் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தியிருப்பது தேவையற்றது.

இதுதொடா்பாக, முதல்வரை சந்தித்து முறையிட்டு, விளக்கக் கடிதம் வழங்கவுள்ளேன். இதில் சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், துணைநிலை ஆளுநரையும் சந்தித்து மனு அளிப்போம் என்றாா் ஆ.அன்பழகன்.

பேட்டியின்போது, கட்சியின் மாநிலப் பொருளா் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலா் நாகமணி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநிலச் செயலா் பாப்புசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com