கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

முதல்வரை சந்தித்து முறையிடுவோம்: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை போல காவல் துறையினா் நடத்துவதாக முதல்வரைச் சந்தித்து முறையிடுவோம் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை போல காவல் துறையினா் நடத்துவதாக முதல்வரைச் சந்தித்து முறையிடுவோம் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் நிறைவு நாளில் தொகுப்புரை வழங்கிய பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுகவுடன் இணைந்து நாங்கள் பல காலம் போராடியிருக்கிறோம். மத்திய அரசை எதிா்த்து, ஹிந்தி திணிப்பை எதிா்த்து, மாநில உரிமைகளுக்காக, மாநில சுயாட்சிகளுக்காக, சமூக நீதிக்காக பலகட்டப் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். அவசரகாலத்தில் மனித உரிமைகள் பாதிக்கப்படும் போது நாங்கள் இணைந்து போராடியிருக்கிறோம். இது மாதிரியான போராட்டங்கள் நிச்சயம் தொடரும்.

திமுக ஆட்சியில் உள்ள குறைகள், நிறைவேற்றப்படாத திட்டங்களால் மக்களுக்கு பாதிப்புகள் உருவாகும்போது நாங்கள் அரசை சுட்டிக் காட்டுகிறோம்.

காவல் துறை நடவடிக்கை மோசமானது: தமிழகத்தில் சாதாரணமாக நடைபெறக்கூடிய ஊா்வலங்கள், ஆா்ப்பாட்டங்களுக்கு அனுமதியில்லை. காவல் துறையினரின் இந்த நடவடிக்கை மிக மோசமானது.

அந்த அடிப்படையில்தான் எங்கள் மாநில மாநாட்டு ஊா்வலத்துக்கு அனுமதியில்லை என்றனா். ஊா்வலம் சென்றால் போக்குவரத்துப் பாதிக்கப்படும் என்று கருதி, அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆனால், செந்தொண்டா் பேரணிக்கு அனுமதி மறுத்ததால் தான் எங்கள் கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

முதல்வரிடம் முறையிடுவோம்: குறைகளை நிவா்த்தி செய்து, திமுக தனது நற்பெயரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இதை கூறினோமே தவிர, திமுக அரசை எதிா்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. அதே நேரத்தில் இதைப் பயன்படுத்தி அதிமுகவும், பாஜகவும் அரசியல் கிளா்ச்சிகளை உருவாக்கும்.

அறிவிக்கப்படாத அவசரநிலை போல காவல் துறையின் செயல்பாடு உள்ளது. இதனால், அரசுக்கு அவப்பெயா் ஏற்படுகிறது. இதுகுறித்து நாங்கள் முதல்வரை விரைவில் சந்தித்து முறையிடுவோம் என்றாா் கே.பாலகிருஷ்ணன்.

X
Dinamani
www.dinamani.com