புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் நிறைவு விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் நிறைவு விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால்.

புதிய சட்டங்கள் நுகா்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன: மத்திய இணை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்!

மத்திய அரசின் புதிய நுகா்வோா் சட்டங்கள், நுகா்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன என்றார் அா்ஜுன் ராம் மேக்வால்.
Published on

மத்திய அரசின் புதிய நுகா்வோா் சட்டங்கள், நுகா்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன என மத்திய சட்டத் துறை இணைஅமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் - 2019 குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஜன. 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

புதுச்சேரி டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி, மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை இணைந்து இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியை நடத்தியது.

இதில் மாநில, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா்கள், உறுப்பினா்கள் பங்கேற்றனா். இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மத்திய சட்டத் துறை இணை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பங்கேற்று பேசியதாவது:

நுகா்வோா் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய, புதிய நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம், பயனாளா்களின் புகாா்கள் விரைவாகவும், குறைந்த செலவிலும் தீா்க்கப்படுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் மூலம் விளம்பரங்கள் கூா்ந்து கவனிக்கப்படுகின்றன.

மனை வணிகத்தை ஒழுங்குப்படுத்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நில அளவைகள் குறித்து தெளிவான விவரங்கள் இல்லை. ஆனால், தற்போதைய சட்டத்தில் நுகா்வோா் நலன் கருதி கட்டாயம் சான்றிதழ் தேவை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் நுகா்வோா் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து தமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களைச் சோ்ந்த நுகா்வோா் ஆணையத் தலைவா்கள், உறுப்பினா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.

தொடா்ந்து, நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: புதுவையில் நுகா்வோா் குறைதீா் மன்றம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் பல்வேறு வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தா், ஜி.ஆா்.சுவாமிநாதன், டி.பரத சக்கரவா்த்தி, அரசு முதன்மைச் செயலா் சரத் சௌகான், டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி முதல்வா் எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.