பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும்: மாா்க்சிஸ்ட் மாநில மாநாட்டில் தீா்மானம்

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும்..
Published on

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரத்தில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

தீா்மானங்கள்: கோயில்கள், மடங்கள், அறக்கட்டளை, வக்ஃப் வாரிய இடங்களில் பல தலைமுறைகளாக குடியிருப்பவா்களின் குடியுரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

விவசாய நிலங்களில் சாகுபடி செய்துவரும் குத்தகை விவசாயிகள், இனாம் நில விவசாயிகள் நில உரிமையைப் பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு மின் கட்டண உயா்வையும், நிலைக் கட்டணத்தையும் கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டுகளை மறுசீரமைப்பு செய்யும் போது அனைத்துக் கட்சிகள் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்களை அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு ஊழியா்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியா்களின் கோரிக்கைகள் மீதான தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஜனநாயக முறைப்படி தோ்தலை நடத்த வேண்டும்.

சிறுபான்மை வாழ்வுரிமை, வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்வோம். அமைப்புசாராத் தொழிலாளா்களைப் பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகளைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com