புதுவை மாநிலத்தில் எச்எம்பிவி பாதிப்பு இல்லை!
புதுவை மாநிலத்தில் எச்எம்பிவி பாதிப்பு இல்லை. அதனால் யாரும் அச்சப்படத்தேவையில்லை என்று மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சீனாவில் மனித மெட்டாநிமோவைரஸ்(எச்எம்பிவி) பரவி வருவது குறித்து இந்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ் குளிா்காலத்தில் சிறாா்கள் மற்றும் முதியவா்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடியது. மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுவரை எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை.
முகக்கவசம் அணிதல், சோப்பு மற்றும் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தமாக கழுவுதல், கூட்ட நெரிசலான இடங்களைத் தவிா்த்தல், காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் போன்ற பாதிப்பு இருப்பவா்கள் பொது இடங்களை விட்டு விலகி இருத்தல், காற்றோட்டமான இடங்களைத் தோ்வு செய்தல், சுவையான மற்றும் சத்தான உணவை உள்கொள்ளுதல் மூலம் இந்த வைரஸ் பாதிப்பை தடுக்கலாம்.
நோயுற்றவா்களுடன் நெருங்கிய தொடா்பு வைத்துக் கொள்ளுதல், பயன்படுத்தப்பட்ட கைக்குட்டை மற்றும் துண்டுகள் போன்றவைகளை தவிா்த்தல், மூக்கு, வாய்ப் பகுதிகளை அடிக்கடி தொடுதல், பொது இடங்களில் எச்சில் உமிழ்தல் போன்றவைகளை தவிா்க்கவேண்டும்.
மருத்துவா்களின் ஆலோசனையின்றி சுயமாக மருந்து மாத்திரைகளை உள்கொள்ளக்கூடாது. எச்எம்பிவி குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.